Om Parambu Malai Vallal
சங்கப் பாடல்களின் வாயிலாகப் பல புலவர்களையும் புரவலர்களையும் நாம் தெரிந்துகொள்ளுகிறோம். சிந்தனைச் செல்வமும் கற்பனை வளமும் படைத்த புலவர்கள் பண்பிலே சிறந்த சான்றோர்களாகவும் விளங்கினார்கள். அதனால் பண் புடைய மக்களை அணுகி அவர்களுடைய இயல்புகளைக் கண்டு மகிழ்ந்து பாராட்டினார்கள். அவர்களுடைய பாராட்டைப் பெற்ற குரிசில்கள் இறந்தும் இறவாதவர்களாகப் புகழுடம்புடன் விளங்குகிறார்கள். அவர்களுக்குள் சிறந்தவர்களாக ஏழு பேரைத் தமிழிலக்கியம் எடுத்துச் சொல்கிறது. ஏழு வள்ளல்கள் என்று அவர்களை ஒருங்கே சொல்வது மரபாகி விட்டது. பிற்காலத்தில் வேறு இரண்டு வள்ளல் வரிசைகளைப் புராணங்களிலிருந்து எடுத்துக் கோத்து விட்டதனால் இவர்களைக் கடையெழு வள்ளல்கள் என்று சொல்லும் வழக்கம் ஏற்பட்டது. ஆனால் இந்த ஏழு வள்ளல்களே வரலாறும் இலக்கியமும் காட்டும் மக்கள்; இவர்களுடைய வரலாற்றுக்கு இலக்கிய ஆதாரங்கள் இருக்கின்றன. இந்த ஏழு வள்ளல்களிலும் தலைசிறந்தவன் பாரிவேள். இன்று பிரான்மலை என்று வழங்கும் பறம்பு மலையில் வாழ்ந்தவன் அவன். புலவர் பெருமக்களிற் சிறந்த கபிலரும் பாரியும் ஆருயிர் நண்பர்கள். கபிலருடைய பாட்டுக்களில் பாரி இன்றும் வாழ்கிறான். அவனுடைய வரலாற்றைத் தெரிந்துகொள்ளப் புறநானூற்றிலுள்ள பல பாடல்களும் சில தனிப் பாடல்களும் உதவியாக இருக்கின்றன.
Vis mer