Om Aaputhiran allathu Punniyarajan
ஆபுத்திரன் சரித்திரம், தமிழ் மொழியிலுள்ள ஐம்பெருங் காப்பியங்களுள் ஒன்றாகிய மணிமேகலைக் காப்பியத்துள் ஆங்காங்கு இடையிடையே வரும் ஒர் கிளைக்கதை. இதனை ஒர் கோவைப்படத் தொகுத்துப் புதிய உரைநடையில் இளைஞர் கதைப்பூந்துணர் மலர் 1 ஆக வெளியிடுகின்றேன். இச்சரித்திரத்துள் காவிய ரசம் பற்றியும், வேறு நன்மை பற்றியும் புனைந்துரைத்த சில பகுதிகளன்றி ஏனையவெல்லாம் 1800 வருடங்கட்கு முன்னர் நிகழ்ந்த உண்மைச் சரித்திரமேயாம். இச்சரிதத்துக்கு மூலமாகிய மணிமேகலையின் சரிதமும் இடையிடையே தொடர்பு பற்றி விரிக்கப் பெற்றிருக்கின்றது. இக்கதையைப் படிக்கும் சிறுவர், சிறுமிகள், அன்பு, அருள், வாய்மை, அறிவு, ஒழுக்கம் முதலிய நற்குண நற்செயல்களில் இளைமையிலேயே சிறந்து, திருந்துவார்கள் என்பது எனது கருத்து. இச்சிறிய நூல் மாணவர்கள் வசனநடை பயிலுதற்கு ஓர் நடைவண்டியாய் உதவி செய்யும். இச்சிறுநூலைக் கல்வி உலகம் உவகையுடன் ஆதரிக்கு மென்னுந் துணிபுடையேன்.
Vis mer